நான் சுட்ட ரெண்டாவது தோசை கருகிடுச்சு…

நான் சுட்ட ரெண்டாவது தோசை கருகிடுச்சு:

ரொம்ப பசிச்சதுன்னு மாவு வாங்கிட்டு வந்து, கரைச்சு வைச்சு தோசை சுட ஆரம்பிச்சேன், ஒரு தோசை சுட்டு, ரெண்டாவது ஊத்திட்டு பொடி வச்சு சாப்பிட ஆரம்பிச்சப்ப, ஒரு சூப்பர் பாட்டு டிவில போட்டதால டிவி பாக்க ஒக்கந்த்துட்டேன், அப்பத்தான் ஞாபகம் வந்து, போயி பாத்தா நான் சுட்ட ரெண்டாவது தோசை கருகிடுச்சு, ச்ச்ச்சான்னு சொலிட்டு சொரண்டி தூக்கி போட்டுட்டு, மொத்தாம சுட்டுட்டு சாப்பிடலாம் நினைச்சு 4 தோசை சுட்டு வைச்சு சாப்பிட போகும் போது….

அன்னைக்கு ஒருநாள்…

அம்மா தோசை சுட்டு கொடுக்க சாப்பிட்டு இருந்தேன், முதல் தோசையில் பாதி சாப்பிட்டு இருப்பேன், கையில் ஒரு தோசையோடு வந்தவள்…

நான் சாப்பிட்டு இருந்த பாதி தோசையை எடுத்துட்டு புது தோசையை வச்சது, ஏன் இப்போ சாப்பிட்டுகிட்டு இருந்த எடுத்தன்னு கொஞ்சம் கோவமா கேட்டுட்டேன்,

அது ஆறீ போயிருக்கும் இந்த இத சாப்பிடுன்னு நீ சொன்ன பதில் இன்னும்நெஞ்சுக்குள் நிக்குதம்மா…

காம கழிவில்
கருவுற்றாலும்
என் கடவுள் நீ என்றாய்
எந்தாய்!

என்னை பெற்றவனுக்காக
உன்
ஆசைகளையும் கனவுகளையும்
ரசிப்பையும்
துறந் தாய்!
எந்தாய்!

உனக்கு பிறந்தவனுக்காக
உப்பு காரம் புளிப்பு என
என ருசிப்புகளையும்
மறந்தாய்!
எந்தாய்!

உருப்பிடமாட்டானென
ஊரே சொன்னப்ப
நீ வருவாய் சிறப்பாய்
என்றாய்
எந்தாய்!

அம்மா என்று அழைக்காத உயிரில்லை
கேட்கும் போதெல்லாம்
அப்படியும்
உயிர் ஒன்று உள்ளதென
கூனி குருகிடுவேன்!

அதுவும்
என் தவறல்லென எனக்கும்
புரியவைத் தாய்!
எந்தாய்!

ஒரு நாள்
நீ செய்த சாப்பாட்டில்
உப்பு குறைச்சு போச்சுன்னு
தட்டோடு தூக்கி போட்டேன்…

அதற்காக அந்த
கடவுள் இன்னும்
தினமும் தண்டித்து
மழிழ்கிறானடி!

நான் செய்த பெருங்குற்றங்களில்
இதுவும் ஒன்றென
நினைக்கவைத்தாயடி
எந்தாய்!