அம்மாவின் விரல் நகங்கள்

எப்பப்பார்த்தாலும் அசிங்கமா
அழுக்காவே இருக்கு
ஒன்னு நகத்தை சுத்தமாக வைச்சுக்கோ
அப்படியில்ல
நகத்தை நீளமாய் வளர்க்காத – என
நாகரிகம் பேசியதுண்டு
அம்மாவிடம்.

பேசும்போதெல்லாம்
புன்முறுவல் செய்துவிட்டு
அடுப்பங்கரையில் ஒளிந்துகொள்வாள்.

மகளின் இருவிழியளவு
கரும்புளி கரைத்து – அதில்
ஒரு தக்காளி பிசைந்து சேர்த்து
நகக்கண் பெருங்காயம்
அதன் மீதெங்கும் தூவி
சிறிது குறுமிளகு சீரகம் நுணுக்கி
நாலு பூண்டுபல் மும்முறை தட்டி
கொஞ்சம் மஞ்சள்
கொஞ்சம் உப்பு கரைத்தெடுத்து

வாணலில் எஎண்ணெய் விட்டு
வர மிளகாயோடு
பத்து கடுகு அள்ளிப்போட்டு
கொத்து கருவேப்பிலை தாளித்து
கரைத்தவற்றை அதில் ஊற்றி
ஒரு கொதி விட்டு
கொத்தமல்லி தழை தூவி இறக்கிவைத்தேன்.

அன்று
பள்ளிக்கூடம் விட்டு
பசியோடு ஓடிவந்தபோது வீசிய – அதே
ரச வாசம்.
நாசியெங்கும் வீசி
மூளையெங்கும் சென்று
முந்தைய நினைவுகளை
இதயமெங்கும் ஓடியது.

சமைத்து முடித்து
குளித்து அமர்ந்து
சாப்பிடும்முன் பார்த்தேன்
என் இரு ஐவிரல்களிலும்
அம்மாவின் நகங்கள் ஓட்டியிருந்தது.

#அவளதிகாரம்

29cebb2a0e8cf231ba770becc2788a05