பீச்சக்கையின் வாசனையும் சுவையும்

சோத்துக்கை உடைத்துவிட்டது

பீச்சக்கையால் சாப்பிட
பழக ஆரம்பிக்கையில்
பீ வாடை எதுவும் அடிக்கவில்லை
முதல் கவளம் வைக்கும்பொழுது
கை சற்று நடுங்கத்தான் செய்ததது

நல்ல வேலை இடதுகை ஒடிந்திருந்தால்
வலது கையால் மலஜலம் கழுவவதற்கு
இதுவே தேவலை என்றிருந்தது

கடவுள் இல்லையென்பதை ஏற்றுக்கொண்டவன் தான்
ஏனிந்த அருவருப்பென விளங்கவில்லை
சம்பிரதாய சாங்கியங்கள்
சந்ததிகள் தாண்டியும் இன்னுமென்
ரெத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருபது எத்தனையோ

எம்மெருமான் வழியில் வந்தவை இன்னும்
என்னென்ன என்னொடு ஒட்டிருக்கொண்டிருக்குதோ
என நினைத்தபொழுது
எம்பெரியார் பின்னாலிருந்து
பிடரியில் சிறு எத்துவிட்டு
மனிதரிலே உயர்வு தாழ்வு இல்லையென்றேன் பின்னே
வலதுகைக்கு ஏனடா இந்த வர்ணாசிர வக்காலத்து
உன்னிரு கைகளில் உயர்ந்தது தாழ்ந்தது உண்டோடா என்றார்

ஒருவாரம் விடுப்பெடுத்தாள் – இனி
ஒரு நாள் ஊழியம் செய்தாலும் ஊதியம் பிடிக்கப்படலாம்
உறவாக வந்தவள் தான் – நான்
உறங்கும் போழுதும் உடனிருந்து விழித்திருந்தாள்
உணவை ஊட்டிவிட்டாள்
உக்காந்து எழும் போது ஒருகை கொடுத்து தூக்கிவிட்டாள்
கழிவறைக்கு அனுப்பிவிட்டு கதவோரம் காத்திருந்தாள்
தண்ணீர் டம்ளர் தவறி சிதறியதில்
பதறி பதபதைத்து என்னடா பண்றவென கதறி ஓடிவந்தாள்

அவசரமாய் சமைத்து அக்கறையை அதில் கொஞ்சம் சேர்த்து
அலுவலகம் சென்றுவிட்டாள்
அறுவை சிகிச்சை பில் அடுத்தமாதம் வரக்கூடும் – இப்போது
மலவாடை ஏதும் மனதில்லை
மனைவி சமைத்ததில் மசாலாவைவிட
மானசீகம் நிறைந்திருந்தது.

#அவளதிகாரம்