ஆண்பால் எனக்கு அசௌகரியமாய் தான் இருக்கிறது.

ஆண்பால் எனக்கு அசௌகரியமாய் இருக்கிறது
அவள் அவன் அதிகாரம் மாத்திரிமின்றி
ஆண்டையர்க்கும் அடிமைக்கும்
சாதி வர்ணம் சம்சார தர்மம்
சம்பிரதாயம் சாங்கிய சூட்சமங்களின்
சூத்திரம் தெளிந்தபின்பு
ஆண்பால் எனக்கு அசௌகரியமாய் தான் இருக்கிறது.

அம்மாவோடு சேர்த்து
ஐந்தாறு பெண்கள் இருக்கும் வீட்டில்
அவளுக்கு முடியாத சமயங்களிலேனும்
அடுப்பங்கறையில் நுழைய

முடியாமல் மூன்று பைகளை தூக்கிவரும்
வேலைக்காரியிடம் ஒரு பை வாங்கி
மனிதம் பகிர்கையில்

ஆண் கவிஞர்கள் யாரும் சொல்லமுடியாத வலியை
பெண் ஒருத்தி எழுதிய யதார்த்த வரியை
பாரட்டுகையில்

என் எழுத்தை ரசித்து பாராட்டும் பெண்மைக்கு
நன்றியைத் தாண்டி அடுத்த வார்த்தை
எழுதமுடியாமல் போகும் தருணங்களில்

அரவமற்ற ரோட்டில் வந்த சத்தம்
ஆணுடைய இருமலென தெரிந்து
எனக்கு முன் சென்றவளின்
நடையடியின் வேகம் கூடுகையில்

எனைப்பார்த்து யதார்த்தமாய் சிரித்த
யாரோ ஒருவரின் பெண்குழந்தையை
தொட்டு தூக்கி கொஞ்சிட நினைக்கும் போதும்

அன்பிற்கும் அதிகாரத்திற்கும்
உரிமைக்கும் உத்தரவுக்கும்
காதலுக்கும் கட்டளைக்கும்
வித்தியாசத்தை பகுக்கமுடியா
கணவன் மனைவி சண்டையின் போது மட்டும் எழும்
அதிகார வர்க்கமாய் எடைபோடும் போதும்

நிர்பயா வினுப்பிரியா ஸ்வாதிகள் பெயர்கள்
தலைப்புச் செய்தி முதல் நீயா நானா வரை இடம்பெறும் போதும்
கற்பழிப்பு வரதட்சனை கௌரவக்கொலைகளின் போதும்
ஆண்பால் எனக்கு அசௌகரியமாய் தான் இருக்கிறது.

அனைவரும் சமமென புரிந்தபின்
ஆண்பால் என்பது அசௌகரியமாய் இருக்கிறது.

நாங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம்

தாத்தாவிற்கு பாட்டி பயபக்தியுடம் அமுது படைத்தாள்
அப்பாவிற்கு சிரித்தமுகத்துடன் பறிமாறினாள்
அவளும் நானும் ஒன்றாக சமைத்துதான் சாப்பிடுகிறோம்

தாத்தா கல் கிடந்ததால் சாப்பாட்டை தூக்கியெறிந்தார்
அப்பா முடி கிடந்தாலும் எடுத்துபோட்டு சாப்பிட பக்குவபட்டியிருந்தார்
நான் நமக்காக சமைத்திருக்கிறேன்

தாத்தா வீதிவில் நுழையும் போதே
அம்மா ஓடி ஒளிந்து அடுப்பங்கரையில் கொள்வாளாம்
அப்பா வீட்டின் அடி வைக்கும் போதே
அடக்கமாய் அமைதியாய் படித்துக்கொண்டிருப்பாளாம் அக்கா
நான் வீடு திரும்பும் போது
டாடிவென ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறாள் மகள்

விளைமகளோ கலைமகளோ
உடல் உறுப்புகள் எல்லாம் ஒரே மாதிரிதான் என்ற எண்ணிம் தோன்றியபோது
எனக்கு பெண்குழந்தை பிறந்திருந்தாள்

கண்ணியமிழந்த கயவர்களின்
கடைசி கையிருப்பு தான்
கற்பும் கலச்சாரமும்
ஜாதியும் மதமும்
ஆண் பெண் பிரிவினையும்

இவையனைத்தும்
ஆயிரம் காலத்து பயிரில் வளர்ந்த
அடிமைபடுத்தும் சூட்சி
இவையாவும் பொய்யென்று புறந்தள்ளினோமே
அதற்கு நீயும் நானும்தான் சாட்சி

நாங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம்

கல்வி எங்களை மாற்றும்
கலை எங்களை மாற்றும்
காதல் எங்களை மாற்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்

படைப்புகள் அனைத்தும் பழுதுகள் ஆகா
விளைச்சலில் விளைந்தது யாவும் பதறுகள் ஆகா
தவறுகள் செய்தவனை தட்டிக்கேளுங்கள்
குற்றம் செய்தவனை கோர்ட்டில் நிறுத்துங்கள்
தப்பினால் குறிவைத்து சுடுங்கள்
அவர்களை ஆண்பாலினத்திலிருந்து விளக்குங்கள்
உயிர் உறுப்பில் சூடு வையுங்கள்
உருத்தெரியாமல் அறுத்தெறியுங்கள்
முடியவில்லையா
ஆண்வர்க்கமென பொதுவாக அழைக்காமல் – வேண்டுமென்றால்
எங்களை ஏலியன் என அழைத்துக்கொள்ளுங்கள்
அதுவும் ஆனந்தமே
ஆண்பால் எனக்கு அசௌகரியமாய் தான் இருக்கிறது.

#அவளதிகாரம்