நிறுத்தடா…வெங்காயம்.

அக்கற்கடவுளர்கள் போல
இத்திராவிடக் கட்சிகள் – எம்பெரியாரையும்
வணிகப் பெயராக மாற்றிவிட்டனயென
பெருங்கவலை எனக்குண்டு.

நலமாய் வாழ
சுயமாய் சிந்திக்கச் சொன்னவன் கொள்கைகளை – தம்
அரசியல் சுயநல பந்திக்கு தின்னக்கொடுத்த
இத்திராவிடக் கட்சிகளின் மேல்
பெருங்கோவம் எனக்குண்டு.

கட்சிகளின் கொடியும் கலரும் மாறினாலும்
நீக்கமற நிறைந்திருக்கிறது
சிறியோர் கட்சிகளில்
பெரியார் நிழற்படம்.
இனிவரும் தேர்தல்களில்
அவா கட்சிகளிலும்
அவர் அலங்கரிக்கலாம்.

ட்விட்டரில் டிரென்டாகியிருக்கும்
பெரியார் ஃபோட்டோவை உற்றுப்பார்க்க – அவரும்
என்னைப்பார்த்து புன்னகைத்தார் – ஆனால்
தாடி மறைத்துவிட்டது.
உன்னிடம் எனக்கு சில கேள்விகள் இருக்கு
கேட்கவா என்றேன்.
தலையசைத்தார்.

தி.க பெரியார்
தி.மு.க பெரியார்
அ.தி.மு.க பெரியார்
ம.தி.க பெரியார்
ம.தி.மு.க பெரியார்
பா.ம.க பெரியார்
இத்தனை கட்சியிலும் இருப்பதும்
ஈ.வே.ரா தானோ!

இத்திராவிடக் கட்சிகளிலெல்லாம்
சமூக நீதி, சாதிய எதிர்ப்பு,
பகுத்தறிவு, கல்வி,
பெண்கள் முன்னேற்றம்,மூடநம்பிக்கை எதிர்ப்பு,
இறைமறுப்பென உம்கொள்கைகளெல்லாம்
எவ்வாறிருக்கு?

உம்மெழுத்தும் புத்தகமும்
பொதுவுடவை செய்யாமல்
விடுதலைக்கே தாம் தான் ஏகபோக உரிமை கொண்டவனென வீர மாமணி
சொல்லும் பொழுதும் – அதில்
உமக்கென தனியொரு கருத்தேதுமுண்டோ!

மேடை ஏறும்போதெல்லாம் பெரியாரின் சீடன் வாயளந்து

ஜாதி கட்சிகளை தம்மோடே வைத்து
எந்தத் தொகுதி யார்யார் கேட்பினும்
அந்த சாதிக்கே கொடுத்து
சாணக்கியம் செய்யும் உம்சீடர் தமிழின தலைவருக்கு
நீவீர் கற்றுக்கொடுத்தில் பிழையேதுமுண்டோ!

அம்மா பவனி வருகையிலே
அமைச்சர்களெல்லாம் குனிகையிலே
உம்முகம் மட்டுமே தெரியும் போஸ்டரில்
நீவீர் எவ்வாறு நிற்கின்றீர்!

நீவீர் நினைத்தபடியே யாமும் படித்துவிட்டோம் – ஏன்
எம்மில் பலர் டாக்டர் கூட ஆகிவிட்டோம்
சந்தோஷம் தானே.
பட்டம் தான் பெற்று விட்டோமே – இப்போது
வன்னியர் தான் அடுத்த முதல்வர் – என்பதை
ஒத்துக்கொள்வதில்
உமக்கேதும் தடையுமுண்டோ.

நிறுத்தடா…வெங்காயம்.
அசரீரி கேட்டது.
பகுத்தரிவில்லையோ உமக்கு
கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறாய்.
இறந்தவன் எப்படி பேசுவான்.

#அவளதிகாரம்

download