நந்நரி நாங்கள் நாணயமானோர்களன்றோ!

மகளை தூங்கவைப்பதென்பது ஒரு பெருங்கலை. முதலில் ஒரு கதை சொல்லவேண்டும், கதையில் ஃபேண்டசி, த்ரில், செண்டிமெண்ட் எல்லாமே இருக்க வேண்டும். கதை முடியும் போது மாரல் ஆஃப் தி ஸ்டோரி என்னப்பா என்பாள் அதன் அதனால் கதையில் அறம் பொருள் இன்பமென அனைத்தயும் சேர்க்கவேண்டும்.

கதை சொல்லும் போதே கைகால் அமுக்கிவிட வேண்டும் அதுவும் சரியான இடைவெளியில் ரிதத்தில் இருக்கவேண்டும். இப்படித்தான் எனக்கு மல்டி டாஸ்கிக் பழகியது. சிறிது நேரம் அமுக்கிவிடாமல் மறந்துவிட்டேன்றால் என் கையை இழுத்து அவள் காலில் வைத்து ம்ம்ம் அமுக்கிவிடு என்ற தொனியில் சைகை செய்வாள்.

அது முடிந்தவுடன் குப்புற படுத்துக்கொள்வாள் இப்பொழுது அவள் முதுகு தண்டுவட இனைப்பெலும்புகளில் மிதமாக அழுத்திவிடனும். அது முதுகெலும்பு கழுத்தை நெருங்கும் போது பிடரியில் முடியை கோதி விட்டு அப்படியே அவள் அயரும் போது அவள் முதுகில் என் விரல் நகங்களால் லேசாக பட்டும் படாமலும் கீறுவது போல் செய்யவேண்டும், அது வலியில்லாமலும் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பு வராமலும் இரண்டுக்குமிடையில் இதமாய் இருக்கனும்.

இந்தபாகத்திற்கு அடுத்து அவளுக்கு பிடித்த பாடல் ஒன்றை போட்டப்பிறகு பாதி பாட்டு ஓடும் போதே தூங்கிவிடுவாள். சில நேரங்களில் எல்லா வரிசையும் முடிந்த பின்னர் அப்பா! தண்ணீ என்பாள் இல்லையென்றால் ச்சூ ச்சூ என்பாள். சரின்னு அதுவும் முடிச்சு இழுத்து பிடிச்சு தட்டிக்கொடுத்துட்டே இருந்தா தூங்கிவிடுவாள். அவ எப்போ தூங்கினாள்ன்னு தெரியாமல் நானும் தூங்கிவிடுவேன், என்றாவது திடீரென்று விழித்துப்பார்த்தால் கைகள் மட்டும் அவள் நான் தூங்கியபின்னரும் தட்டிக்கொண்டே இருக்கும்.

ஒரு நாள் அவளுக்கு பெருங்காய்ச்சல் போர்வையெல்லாம் அவள் குளிரை தடுக்கமுடியவில்லை, அவள் முழுதும் நான் படர்ந்ததை போல இறுக கட்டிப்பிடித்துக்கொண்டாள், முகத்தையும் மூடுவதற்காக என்னை அவள் தலைமேல் படுக்குமாறு கழுத்தை கட்டிப்பிடித்துத் தூங்கினாள். அப்படியே ஒரு வாரம் தூங்கிப்பழகிய அவள், இன்னும் மூன்று வருடமாய் அப்படித்தான் தூங்குகிறாள். முதலில் எனக்கு தூங்குவற்கு வசதியாய் இருந்ததில்லை, சரி புள்ளை காய்ச்சல் வரைக்கும் இப்படியே தூங்கட்டும்ன்னு இருந்தேன், எனக்கும் அப்படியே பழகிவிட்டது. இப்பொழுது அவள் இல்லாத நாட்களில் தூங்குவதெனக்கும் சிரமமாய் தான் இருக்கிறது.

இப்படியான ஒரு நாளில், என்னிடம் புதுக்கதை எதுவும் கைவசமில்லை அதனால் தந்திரக்கார நரி கத சொல்லட்டுமா என்றேன். உடனே ஏம்பா நரியை மட்டும் தந்திரக்கார நரின்னும் எல்லாக்கதையிலயும் சொல்லுற என்றாள். அன்றிலிருந்து எங்கள் வீட்டில் அந்த நரி புத்திசாலிக்காரன் என்ற புனைப்பெயருடன் வளர்ந்து வருகிறது. அதுதான் இக்கவிதையின் கரு.

ஆனாலும் எனக்கொரு சந்தேகம் நீண்ட நாட்களால் “குழந்தையைத் தூங்க வைப்பது” ஏன் இன்னும் ஆயக்கலைகளில் சேர்க்கவில்லை.
இனி….

நந்நரி நாங்கள் நாணயமானோர்களன்றோ:

தீயின் ஊற்றில் தெறித்தப் பிழம்பு
அண்ட வெளியில் சுற்றித் திரிந்து
வின்கற்களோடு ஒட்டிக்கொண்ட
தூசிதும்பு குப்பையெல்லாம்
வடிவமில்லா பிண்டமாகி
குயவன் திகிரி களிமன் போலே
வட்டப்பாதையில் சுற்றி வந்து
உருண்டையாகி கிரகம் ஆனது

ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டி
அக்கினி அடங்கி ஆறியபின்னே
எரிமலை புகையில் கார்பன் சேர்ந்து
ஐம்பூதங்களோடு வேதியியல் செய்து
பக்குவப்பட்டு பக்குவப்பட்டு புனிதமான பூமியானது.

ஒற்றை செல் உயிர்கள் தோன்றி
செல்களெல்லாம் பல்கிப்பெருகி
பரிணாமம் அடைந்து பல்லுயிரிகளானது.

புல்லுக்கும் பூண்டுக்கும்
புழுவுக்கும் பூச்சியுக்கும்
பாம்புக்கும் மீனுக்கும்
கிளியிக்கும் கழுகுக்கும்
மாட்டுக்கும் மனிதனுக்கும்
பூமி என்பது பொதுவாய் இருந்தது

தன்னில் வலியது தப்பிப்பிழைத்தது
புல்லைத்தின்று மான்கள் ஓடின
ஓடிய மான்களை புலிகள் அடித்தன
இறந்தப் புலிகளில் புழுக்கள் நெலிந்தன
மாய்ந்தவையனத்தும் மண்ணே தின்றது
மண்ணைத்தின்று மரங்கள் வளர்ந்தன
கொன்றால் பாவம் தின்றால் போனது
இரைக்காய் கொல்வது இறையாண்மை ஆனது

ஆறாம் அறிவை அதிகம் பெற்றவன்
மரத்தை வெட்டி வீடுகள் செய்தான்
குழிகள் வெட்டி யானையை பழக்கினான்
கன்னிகள் வைத்து காட்டை ஆண்டான்
நாயை பிடித்து நன்றியுள்ளது என்றான்
நதிக்கரைதனில் நாகரீகம் வளர்த்து
மிருக காட்சி சாலைகள் வைத்து
விலங்குகள் பறவைகள் எல்லாம் அடைத்து
மனிதாபிமானம் என்று காரூண்யம் செய்தான்
அறிவியல் வளர்ந்து ஆயுதம் செய்தான்
அவனை அவனே அடித்து கொள்கிறான்

கூடுட்டைச் சுமந்து சுற்றியது நத்தை
சட்டென விழுங்கியப் சதையை தின்று ஓட்டை கக்கியது பாம்பு
ஆபத்தென்று ஓட்டுக்குள் ஒளிந்தது ஆமை
வேவு பார்த்து வேட்டையாடியது கழுகு

புலிப் பதுங்குவது பாய்வதற்கென்று
புகழ்ச்சி செய்தான் மனிதன்
மறைந்து நின்று குரங்கைக்கொன்ற ராமன்
கடவுள் என்றான் அவனே.

சூட்சிகள் ஒன்றே மனித சூத்திரமன்றோ
உத்திகள் வகுப்பது எம் உணவுகென்றோ
நன்னெறி யென்பது வெறும் நகைச்சுவையன்றோ
நந்நரி நாங்கள் நாணயமானோர்களன்றோ -இனியும்
தந்திர நரிவென் றழைப்பது நன்றோ

இப்படிக்கு
நரி

#அவளதிகாரம்
#மகளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
http://www.flipkart.com/item/9788193001837

சிங்கப்பூரில் வாங்க,
http://list.qoo10.sg/item/AVALATHIKAARAM/419615613

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
https://www.amazon.com/dp/8193001834

| FREE Home Delivery || Cash on delivery

#avalathikaaram

equality